புதுடெல்லி: அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
பட்ஜெட் கூட்டத்தொடரின் ஐந்தாவது நாளான இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு நாடாளுமன்ற மக்களவைக் கூட்டம் தொடங்கியது. அமெரிக்காவில் இருந்து 100க்கும் அதிகமானோர் நாடு கடத்தப்பட்டிருப்பது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கி இருந்தது. அதில் நமது மக்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதைத் தடுக்கவும், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அவர்களின் கண்ணியத்தைக் காத்திடவும் இந்த அவை இந்த விவகாரத்தை உடனடியாக கையாள வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.