புதுடெல்லி: இந்தியா – அமெரிக்கா இடையே மினி வர்த்தக ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு இன்று இரவு வெளியாகும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முழு அளவிலான ஒப்பந்தம், கூடுதல் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த ஆண்டின் இறுதியில் கையெழுத்தாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, உலகின் பல நாடுகள் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரிகளை விதிப்பதாகக் கூறி வரும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், பதிலுக்கு அந்த நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதிக்கும் என அறிவித்தார். 30%, 40% என கூடுதல் வரி விகிதத்தை அவர் அறிவித்ததை அடுத்து பல நாடுகள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தன. இதனால், அடிப்படை கூடுதல் வரி விகிதமாக 10%-ஐ அறிவித்த டொனால்டு ட்ரம்ப், 90 நாட்களில் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள நாடுகளுக்கு அவர் அழைப்பு விடுத்தார். பல நாடுகள் அமெரிக்காவுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால், பிரிட்டன் மற்றும் வியட்நாம் ஆகிய இரு நாடுகளுடன் மட்டுமே ஒப்பந்தம் இறுதியானது.