துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு துபாயில் நடைபெறும் அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இரு அணிகளுமே லீக் சுற்றில் தோல்வியை சந்திக்காமல் அரை இறுதி சுற்றில் கால்பதித்துள்ளன. ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றிருந்த ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் வங்கதேசம், பாகிஸ்தான் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த நிலையில் கடைசி ஆட்டத்தில் நியூஸிலாந்தை 44 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது. அதேவேளையில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியிருந்தது. இதன் பின்னர் தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிராக மோத இருந்த ஆட்டங்கள் மழை காரணமாக ரத்தாகியிருந்தது.