புதுடெல்லி: இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 8-வது அட்டவணை பட்டியலில் 22 மொழிகள் இடம்பெற்றுள்ளன. அவற்றுடன் நாடு முழுவதும் பல மொழிகள் பேசப்படுகின்றன. அவற்றில் பலவற்றுக்கு எழுத்துகள் கிடையாது. இதுபோன்ற அரிய மொழிகளை பேசுபவர்களும் படிக்கும் வகையில் திருவள்ளுவரின் திருக்குறள் வெளியாகிறது.
இந்த தகவலை, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் மத்திய கல்வித் துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் (சிஐசிடி) திருக்குறளை மொழிபெயர்த்து வருகிறது. இதன் சார்பில் நீலகிரி மாவட்ட பழங்குடிகளின் 6 மொழிகளிலும் திருக்குறள் வெளியாகிறது. அவற்றில் இருளா, காட்டு நாயகா, கோத்தா, குரும்பா, பனியா மற்றும் தோடா ஆகிய மொழிகள் இடம் பெற்றுள்ளன. இந்த மொழிகளுக்கு தனி எழுத்துக்கள் இல்லாததால், திருக்குறள் தமிழ் எழுத்துக்களால் வெளியாகின்றன. இதுபோன்ற 20 அரிய மொழிகளில் வெளியாகும் முதல் மொழிபெயர்ப்பு நூலாக திருக்குறள் அமைந்துள்ளது.