இந்தியாவின் முதல் பார்முலா 1 கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன். கோவையை சேர்ந்த இவர், சிறுவயதிலேயே கார் பந்தயத்தில் ஆர்வம் கொண்டு, படிப்படியாகத் தன்னை வளர்த்துக் கொண்டார். இவருடைய வாழ்க்கைக் கதை திரைப்படமாக உருவாகிறது. இதை மகேஷ் நாராயணன் இயக்குகிறார். இவர் கமல்ஹாசனின் விஸ்வரூபம், விஸ்வரூபம் 2 படங்களுக்குப் படத்தொகுப்பாளராக பணியாற்றியவர். மலையாளத்தில், டேக் ஆப், சி யு ஸூன், மாலிக், அரியிப்பு ஆகிய படங்களை இயக்கி இருக்கிறார்.இவர் இப்போது நரேன் கார்த்திகேயன் பயோபிக்கை தமிழில் இயக்குகிறார்.
‘என்கே 370’ என்று தற்காலிகத் தலைப்பு வைத்துள்ள இந்தப் படத்தை ப்ளூ மார்பிள் பிலிம்ஸில் சார்பில் ஃபராஸ் அஹ்சன், விவேக் ரங்காச்சாரி, பிரதிக் மைத்ரா ஆகியோர் தயாரிக்கின்றனர். ஷாலினி உஷா தேவி திரைக்கதையை எழுதியுள்ளார். இதுபற்றி மகேஷ் நாராயணன் கூறும்போது, “நரேன் கார்த்திகேயனின் பயணம் என்பது வெறும் கார் பந்தயம் மட்டுமல்ல, அது நம்பிக்கையை பற்றியது. அதுதான் என்னை இந்தக் கதைக்குள் இழுத்தது” என்று தெரிவித்துள்ளார்.