புதுடெல்லி: “இந்தியாவில் உங்களைப் பார்க்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்று விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமரின் கடித நகலை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங், "சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி ஒரு நிகழ்வில் விண்வெளி வீரர் மாசிமினோவை சந்தித்தார். அப்போது, தன்னுடையதும், இந்திய மக்களுடையதுமான இந்தக் கடிதம் சுனிதா வில்லியம்ஸை சென்றடைய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவரது பாதுகாப்பான வருகைக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், இந்தியாவின் புகழ்பெற்ற மகளுடனான ஆழமான பிணைப்பை மீண்டும் உறுதிப்படுத்தினார். இதனால் நெகிழ்ந்துபோன சுனிதா, பிரதமர் மோடிக்கும் இந்தியாவுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்" என குறிப்பிட்டுள்ளார்.