பெரம்பூர்: பெரம்பூர் டான்போஸ்கோ பள்ளியில் முதல்வரின் கலைக்களம் என்ற பெயரில் மூன்று நாட்கள் தொடர் கலை விழா நடைபெற்றது. நேற்று 3வது நாள் கலை விழாவில் நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி, தர்மபுரி ஆதீனம் ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர். மேலும் 25 மகளிர் சுய உதவி குழுவினர் மூலம் நடத்தப்படும் 200 வகையான உணவு திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுக்கு பிடித்த உணவுகளை சுவைத்து மகிழ்ந்தனர்.
நிகழ்ச்சியில் தர்மபுரி ஆதீனம் பேசியதாவது:
முதல்வர் எல்லா துறையிலும் வெற்றி பெற்றுள்ளார். இந்த ஆட்சியில் கோயில்கள் மூலமாக தொடர்ந்து கலைகளை வளர்த்து வருகின்றனர். தற்போது 40, 50 ஆண்டுகளாக குடமுழுக்கு நடைபெறாத கோயில்களுக்கெல்லாம் முதல்வர் பதவி ஏற்ற 2, 3 ஆண்டுகளில் குடமுழுக்கு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த அரசு ஆன்மிக அரசாக திகழ்வதற்கு இங்கு நடக்கும் குடமுழுக்குகளே காரணம். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:
தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்திய திருநாட்டிலேயே இன்று தனக்கென ஒரு இடத்தை பிடித்து தனித்துவமாக திகழ்கிறார் நமது முதல்வர். அவருடைய ஒரு வார்த்தைக்காக இந்திய திருநாடு காத்துக் கொண்டிருக்கிறது. ஒரு விஷயத்தை அவர் கூறுகிறார் என்றால் அது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எதிரொலிக்கிறது என்றால் அது நமது முதல்வரின் குரலாக தான் இருக்க முடியும். அதனால்தான் இந்தியா முழுக்க அவர் தன் பக்கம் ஈர்த்துள்ளார். தொடர்ந்து நமது தோழர்கள் நமது முதல்வரின் புகழ் உயர தொடர்ந்து அவரோடு தோள் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்
நிகழ்ச்சியில் மேயர் பிரியா, பகுதி செயலாளர்கள் ஐ.சி.எப் முரளி, நாகராஜன், மண்டல குழு தலைவர் சரிதா, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மகேஷ் குமார், சந்துரு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
The post இந்தியாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து தனித்துவமாக திகழ்கிறார் முதல்வர்: அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு appeared first on Dinakaran.