நியூயார்க்: இந்தியாவுடனான அமெரிக்காவின் நல்லுறவை அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் ஈகோ அழிக்க அனுமதிக்க முடியாது என்று அமெரிக்க காங்கிரஸ்(நாடாளுமன்றம்) உறுப்பினர் ரோ கன்னா தெரிவித்துள்ளார்.
அமெரிக்க காங்கிரஸின் ஒப்புதல் இல்லாமல், அதிபருக்கு இருக்கும் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பல்வேறு நாடுகளுக்கு எதிராக கூடுதல் வரி விதித்த டொனால்ட் ட்ரம்ப், இந்தியப் பொருட்களை இறக்குமதி செய்ய முதலில் 25% வரி விதித்தார். பின்னர், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி மேலும் 25% வரியை விதித்தார். இதனால், இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவு பின்னடைவைச் சந்தித்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்று வந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தையும் தற்போது நடைபெறவில்லை.