ஜெய்ப்பூர்: நாட்டின் முதல் பெண் பிரதமரும், முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தி குறித்து பாஜக அமைச்சர் சர்ச்சைக்குரிய வகையில் தெரிவித்த கருத்தைக் கண்டித்து ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். நேற்று விடிய விடிய சட்டப்பேரவையில் உள்ளிருப்புப் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது அவர்கள் தர்ணாவை தொடர்கின்றனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறுகிறது. ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நேற்று ‘லக்பதி தீதி’ திட்டம் குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது ராஜஸ்தான் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் அமைச்சரான அவினாஷ் கெலாட், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசினார். இதற்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அமைச்சரின் கருத்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம் எல் ஏக்கள் கோரினர். ஆனால் சபாநாயகர் அந்தக் கோரிக்கையை ஏற்கவில்லை. இதனால் சட்டப்பேரவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதைத் தொடர்து காங்கிரஸ் மாநிலக் கட்சித் தலைவர் கோவிந்த் சிங் தோதாஸ்ரே உள்பட 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.