அமராவதி: வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக பல வன்முறை சம்பவங் கள் தொடர்ந்து நடைபெறுவதுடன் பல இந்து கோயில்களும் அடித்து நொறுக்கப்பட்டு வருகின்றன. அடக்குமுறைகள் அதிகரித்து வரும் நிலையில், இஸ்கான் கோயில் மதகுருவான சின்மய் கிருஷ்ண தாஸை அந்நாட்டு போலீஸார் டாக்கா விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர்.
இந்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு தங்களின் மதகுருவை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இஸ்கான் அமைப்பு கோரியுள்ளது. இந்நிலையில், ஆந்திர மாநில துணை முதல்வர் பவன்கல்யாண் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது: இந்துக்களை குறி வைத்து நடத்தப்படும் இதுபோன்ற நடவடிக்கைகளை அனைவரும் கூட்டாக சேர்ந்து கண்டிக்க வேண்டும். இதற்காக நாம் போராடவும் தயாராக இருக்க வேண்டும். வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடக்கும் இது போன்ற மதம் சம்பந்தப்பட்ட போராட்டங்களை அந்நாட்டு அரசு உடனடியாக நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வங்கதேசம் உருவாக இந்திய ராணுவத்தினர் பலர் உயிர் தியாகங்களை செய்துள்ளனர் என்பதை அந்நாட்டு தற்காலிக அதிபர் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.