சென்னை: இன்னும் கால் நூற்றாண்டு காலத்திற்கு மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி தொடரும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார். துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சாணிகுளம் பகுதியில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு 400 பெண்கள் பொங்கலிட்ட சமத்துவ பொங்கல் விழா நடந்தது. நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்துகொண்டு சிறப்பித்தார். அப்பகுதி சிறுவர்களுடன் உறி அடித்தும், சிலம்பம் சுழற்றியும் பொங்கல் விழாவை அவர் கொண்டாடினார். மேலும், சிலம்பம் சுழற்றிய சிறுவர், சிறுமிகளுக்கு ரொக்கமாக பரிசுத்தொகை வழங்கி பாராட்டினார்.
பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:
இன்னும் கால் நூற்றாண்டு காலத்திற்கு எங்கள் தலைவர் (முதல்வர் மு.க.ஸ்டாலின்) தலைமையில் ஆட்சி தொடரும். நடைபெறுகிற குற்றச்சம்பவங்களை தடுப்பது ஒருபுறம், நடந்து முடிந்த பிறகு அதன் மீது நடவடிக்கை எடுப்பது ஒருபுறம் என இந்த ஆட்சியை பொறுத்தவரை இன்னார் இனியவர் பாகுபாடு இன்றி தவறு யார் செய்திருந்தாலும் அதன் மீது நடவடிக்கை எடுக்கின்ற சட்டத்தின் ஆட்சியை முதலமைச்சர் நடத்திக் கொண்டிருக்கிறார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த ஐஐடி மாணவி பாலியல் சம்பவத்தில் உரிய குற்றவாளியை கைது செய்து கடுமையான பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு காவல்துறையை முழுமையான அளவில் முடுக்கிவிடுவதோடு, குற்ற சம்பவங்கள் நடைபெற்றால் அதன் மீது உரிய நடவடிக்கையை 24 மணி நேரத்தில் எடுக்கிற ஒரு ஆட்சியாக முதலமைச்சர் ஆட்சி இருந்து கொண்டிருக்கிறது.
ஈரோடு இடைத்தேர்தலை பொறுத்தவரை யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பதை போல 2026 சட்டமன்ற தேர்தலுக்கு காட்டுகின்ற ஒரு வெற்றிப் பாதையாக, வெற்றிக்கு உண்டான அறிகுறியாக, வெற்றிக்கான விருட்சமாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் இருக்கும் என்று நம்புகிறோம். முதலமைச்சரின் சீறிய திட்டங்களால் இதுவரை பெற்றிடாத, பெருவாரியான, எதிர்பாராத வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை பரிசளிக்க தேர்தல் நாளை எதிர்நோக்கி ஈரோடு வாக்காளர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பகுதி திமுக செயலாளர்கள், வட்ட செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
The post இன்னும் கால் நூற்றாண்டு காலத்திற்கு மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி தொடரும்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.