சென்னை: இன்னொரு மொழிப்போர் நம் மீது திணிக்கப்பட்டால், தமிழைக் காப்பதற்காகச் சிறைக் கொடுமைக்குள்ளாகி, தன் இன்னுயிர் ஈந்த நடராசன், தாளமுத்து எனும் மாவீரர்களை நெஞ்சில் ஏந்தி, களம் புகுவோம் என தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் என்ற தலைப்பில் இரண்டாவது நாளாக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அவர் தனது கடிதத்தில், "இந்தியை தி.மு.க. ஏன் இன்னமும் எதிர்க்கிறது என்று நம்மை நோக்கிக் கேட்பவர்களுக்கு, உங்களில் ஒருவனான நான் அன்போடு சொல்லக்கூடிய பதில், “இன்னமும் நீங்கள் அதைத் திணிப்பதால்தான், நாங்கள் அதனை எதிர்க்கிறோம்” என்பதே. திணிக்காவிட்டால், எதிர்க்கமாட்டோம். அதைத் தடுக்க மாட்டோம். தமிழ்நாட்டில் இந்தி எழுத்துகளை அழிக்கமாட்டோம். தமிழர்களின் தனித்துவமான குணம் என்பது சுயமரியாதை உணர்வு. அதனை சீண்டிப் பார்க்க எவர் நினைத்தாலும் அனுமதிக்க மாட்டோம்.