சென்னை: இயர் போன்கள், ஹெட்போன்கள் பயன்படுத்துவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இன்றைய இளைஞர்கள் இயர் போன்கள் மற்றும் ஹெட்போன்கள் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் காது கேளாமை எனப்படும் முக்கிய பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர். சமீபத்திய ஆராய்ச்சிகளின்படி நீண்ட நேரம் மற்றும் அதிக அளவில் இசை மற்றும் பிற ஒலிகளை, ஒலி சாதனங்களை பயன்படுத்தி கேட்பதன் மூலம் திரும்ப பெற முடியாத செவித்திறன் இழப்பு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
பாதுகாப்பற்ற முறையில் ஒலி சாதனங்களை பயன்படுத்துவதால் இன்றைய இளைய தலைமுறையினர் அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றனர். நீண்ட நேரம் இயர் போன், ஹெட்போன், இயர் ப்ளக் பயன்படுத்திய பின், தற்காலிகமாக செவித்திறனில் மாற்றம் ஏற்படுவதாக ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது பொதுவாக நமது தினசரி வாழ்க்கையில் எளிதில் கவனிக்கப்படுவதில்லை. பாதுகாப்பற்ற ஒலி சாதனங்களை நீண்ட காலம் தொடர்ந்து பயன்படுத்துவதால் செவித்திறனில் நிரந்தர மாற்றம் ஏற்பட்டு காதுகேளாமைக்கு வழிவகுக்கும். சிலருக்கு நிரந்தர காது இரைச்சல் ஏற்படும்.
குழந்தைகள் இணையத்தில் விளையாடும் பழக்கம் தற்போது அதிகரித்துள்ளதால் அதிக ஒலியை அடிக்கடி கேட்பதால் செவித்திறன் குறையும் நிலைக்கு உள்ளாகின்றனர். “வரும் முன் காப்போம்” என்பதை கருத்தில் கொண்டு ஒலி சாதனங்களால் ஏற்படக்கூடிய காது கேளாமையை தடுப்பதற்கு பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படுகிறது.
* சாதாரண அளவிலான ஒலி இருந்தாலும், ஒயர் மூலம் இணைக்கப்பட்ட ப்ளூடூத் இயர் போன், ஹெட்போன், இயர் ப்ளக்கின் தேவையற்ற பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது செவியின் கேட்கும் திறனை குறைத்து நிரந்தர காது கேளாமையை ஏற்படுத்தும்.
* தேவை ஏற்படின் இயர் போன், ஹெட்போன் போன்ற தனிப்பட்ட ஒலி சாதனங்களை 50 டெசிபல் ஒலிக்கு மேலே இல்லாமல் பயன்படுத்த வேண்டும்.
* தினமும் ஒயர் மூலம் இணைக்கப்பட்ட ப்ளூடூத் இயர் போன், ஹெட்போன், இயர் ப்ளக்கின் பயன்பாட்டை 2 மணி நேரத்திற்கு மேல் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஒலி சாதனங்களை பயன்படுத்தும் அடிக்கடி இடைவேளைகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* குறைந்த ஒலியில், அதிக இரைச்சலை தவிர்க்கக் கூடிய ஹெட்போன்களை பயன்படுத்த வேண்டும்.
* குழந்தைகள் அதிகமாக கைப்பேசி, தொலைக்காட்சி பார்ப்பதை குறைக்க வேண்டும். ஏனெனில் இது மூளை வளர்ச்சியில் தாமதத்தை ஏற்படுத்தி, சமூக தொடர்பு மற்றும் நடத்தையில் மாற்றம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். இதற்கு குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் முன் உதாரணமாக செயல்பட வேண்டும்.
* குழந்தைகள் இணையத்தில் விளையாடும் விளையாட்டின் நேரத்தை குறைப்பதன் மூலம் அவர்கள் காது அதிக சத்தத்திற்கு உட்படுவதை தவிர்க்க முடியும்.
* சமூக ஊடகங்களில் செலவிடும் நேரத்தை குறைத்து குடும்ப நபர்களுடன் செலவிடும் நேரத்தை அதிகரிக்க வேண்டும்.
* பொது இடங்களில் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பவர்கள், சராசரி ஒலி 100 டெசிபலுக்கு அதிகமாக இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும்.
* காது கேட்கும் திறன் பரிசோதனைகளை செய்து கொள்வதன் மூலம் உரிய நேரத்தில் சிகிச்சையை மேற்கொண்டு செவித்திறன் இழப்பை தவிர்க்க முடியும்.
* காதுகேட்கும் திறன் முற்றிலும் பாதிக்கப்படும்போது, காதுகேட்கும் உதவி கருவிகள் மூலம் கேட்கும் திறனை மீண்டும் பெற இயலாது. மேலும் நிரந்தர காது இரைச்சல் இளஞ்சிறு வயதிலிருந்தே தொடர்ந்தால் மனஅழுத்தம் உட்பட பல மனரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
The post இயர் போன்களை பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்: பொதுசுகாதாரத் துறை வெளியீடு appeared first on Dinakaran.