ராமேஸ்வரம்: இலங்கை சிறையிலுள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க கோரி ராமேஸ்வரத்தில் இன்று மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், 700 விசைப்படகுகள் கரைநிறுத்தம் செய்யப்பட்டு
உள்ளன. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் 386 விசைப்படகுகள் மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்று கடலுக்கு சென்றன. பாக் ஜலசந்தி கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் இருதயம் (59), ஆரோக்கியதாஸ் (49), அந்தோணியார் அடிமை (64), ரோகன்லியன் (54), ராமச்சந்திரன் (40) உட்பட 17 பேரை 2 படகுகளுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
அவர்களை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்ப்பாணம் இலங்கை சிறையில் அடைத்தனர். இலங்கை கடற்படையின் அத்துமீறிய சிறைபிடிப்பு நடவடிக்கையை கண்டித்தும், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், பறிமுதல் படகுகளையும் ஒன்றிய அரசு மீட்டுத்தர வலியுறுத்தி ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 700க்கும் அதிகமான விசைப்படகுகள் கரைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.
The post இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்: 700 படகுகள் கரைநிறுத்தம் appeared first on Dinakaran.