புதுடெல்லி: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது சிஎஸ்கே அணி. முதலில் பேட் செய்த சிஎஸ்கே 8 விக்கெட்கள் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஆயுஷ் மாத்ரே 20 பந்துகளில் 43 ரன்களும், டெல்வால்ட் பிரேவிஸ் 25 பந்துகளில், 42 ரன்களும் விளாசினர்.
ஷிவம் துபே 32 பந்துகளில் 39 ரன்களும், தோனி 17 பந்துகளில் 16 ரன்களும் சேர்த்தனர். ஒரு கட்டத்தில் சிஎஸ்கே 7.4 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 78 ரன்கள் எடுத்து தடுமாறியது. ஆனால் டெவால்ட் பிரேவிஸ் தனது அதிரடியால் ஆட்டத்தின் போக்கை மாற்றினார். இருப்பினும் அவர் ஆட்டமிழந்த பின்னர் ஷிவம் துபே, தோனி ஜோடி பெரிய அளவில் தாக்குதல் ஆட்டம் தொடுக்கவில்லை.