சென்னை: இந்தியாவின் மூத்த விண்வெளி விஞ்ஞானியும், இஸ்ரோ முன்னாள் தலைவருமான கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியதாவது; இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோவின் முன்னாள் தலைவரும், புகழ்பெற்ற அறிவியலாளருமான முனைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். கேரளத்தில் பிறந்த தமிழரான முனைவர் கஸ்தூரி ரங்கன், இந்திய வின்வெளி ஆராய்ச்சி அமைப்பின் தலைவராக பதவி வகித்த காலத்தில் தான் ஏராளமான செயற்கை கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டு, புதிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொண்டவர்.
மேற்குத் தொடர்ச்சி மலைகளை பாதுகாப்பதற்காக கஸ்தூரிரங்கன் குழு தயாரித்து அளித்த பரிந்துரை அறிக்கை வரலாற்று சிறப்பு மிக்கதாகும். நான் மத்திய சுகாதாரத்துறை மந்திரியாக பதவி வகித்த காலத்தில் நாடாளுமன்ற மாநிலங்களை உறுப்பினராக பணியாற்றியவர் கஸ்தூரி ரங்கன். அவரது மறைவு இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், அறிவியலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் மறைவு: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல்! appeared first on Dinakaran.