புதுடெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் புதிய தலைவராகவும், விண்வெளித் துறை செயலராகவும் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர்.வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இஸ்ரோ தலைவராக உள்ள சோம்நாத்தின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில் புதிய தலைவராக வி.நாராயணன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் வரும் ஜனவரி 14 ஆம் தேதி முறைப்படி பதவியேற்றுக் கொள்கிறார். இஸ்ரோவின் 11-வது தலைவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு ஆண்டுகள் அல்லது மறு அறிவிப்பு வரும் வரை வி.நாராயணன் இஸ்ரோ தலைவராக செயல்படுவார் என மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு ( ACC ) அறிவித்துள்ளது. நியமனக் குழு என்பது மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் முக்கியப் பதவிகளுக்கு மூத்த அதிகாரிகளை நியமிப்பதற்குப் பொறுப்பான இந்திய அரசாங்கத்தின் உயர்மட்டக் குழு ஆகும்.