ஈராக் உளவுத்துறையுடன் இணைந்து அமெரிக்கப்படை நடத்திய ஏவுகணை தாக்குதலில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் செயல்பாடுகளை கவனித்து வந்த முக்கியத் தலைவர் அபு காதிஜா உயிரிழந்தார்.
ஈராக்கில் தீவிரவாத தடுப்பு நடுவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்க அமெரிக்க வீரர்கள் 2,500 பேர் முகாமிட்டுள்ளனர். ஈராக்கின் தொலைதூர பகுதிகள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் 2-வது இடத்தில் உள்ள முக்கியத் தலைவர் அபு காதிஜா. இவர் உலகின் பல நாடுகளில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் செயல்பாடுகளை ஈராக்கில் இருந்தபடியே கவனித்து வந்தார். ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு தேவையான ஆயுதங்கள், பொருட்கள், நிதி ஆகியவற்றை இவர் பல நாடுகளுக்கு அனுப்பி வந்தார். ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இவரது கட்டுப்பாட்டில் இருந்து வந்தனர். இவருக்கு அமெரிக்கா கடந்த 2023-ம் ஆண்டே தடை விதித்திருந்தது.