நியூயார்க்: ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகிக் கொள்வதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். மேலும் ஈரானுக்கு எதிராக மேலும் பொருளாதார தடைகளை விதித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஈரானின் அணுசக்தி திட்டங்களுக்கு இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதனால் மேற்கண்ட நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015ல் கூட்டு விரிவான செயலாக்கத் திட்டம் உருவாக்கப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் கீழ், ஈரான் அதன் அணுசக்தித் திட்டங்களைப் பெரிதும் குறைத்துக்கொள்வதற்கு ஈடாக அதன் மீது விதிக்கப்பட்டிருந்த தடைகள் அகற்றப்பட்டன. ஆனால், 2018ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முடிவுக்கு ஏற்ப அந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது.
அதைத் தொடர்ந்து ஈரானும் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருந்த அணுசக்தி தொடர்பான கட்டுப்பாடுகளிலிருந்து விலகத் தொடங்கியது. இந்த நிலையில் அமெரிக்க அதிபராக மீண்டும் டிரம்ப் வந்துள்ளதால், அவர் ஈரானுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கியுள்ளார். ஈரான் மீதான உலகளாவிய தடைகள் அனைத்தையும் மீண்டும் நடப்புக்குக் கொண்டுவரத் தயார் என்று இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளும் உறுதியளித்துள்ளன. இந்நிலையில் ஈரானுக்கு எதிராக அதிகபட்ச அழுத்தம் கொடுக்கும் தனது நிர்வாக உத்தரவுகளில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் ஈரானுக்கு எதிரான பொருளாதார தடைகள் தீவிரமாக்கப்படும். ஈரானின் அணுசக்தி அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். மேற்கண்ட உத்தரவுகள் மட்டுமின்றி ஏற்கனவே ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணிகள் நிறுவனத்திற்கான நிதியை டிரம்ப் குறைத்து உத்தரவிட்டார்.
தற்போது இந்த உத்தரவில் அதிபர் கையெழுத்திட்டார். மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்காவை விலக்கிக் கொள்வது தொடர்பான உத்தரவிலும் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். மேற்கண்ட உத்தரவுகளின் மூலம் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணிகள் நிறுவனத்திற்கான நிதிஉதவி அளிக்கப்படாது. இதை தொடர்ந்து ஐ.நாவின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பில் (யுனெஸ்கோ) பங்கேற்பதை மறுபரிசீலனை செய்யுமாறு டிரம்ப் உத்தரவிட்டார்.
காசாவை அமெரிக்கா கையகப்படுத்தும்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகுடன் ஒன்றாக அளித்த பேட்டியில், ‘போரினால் பாதிக்கப்பட்ட மத்திய கிழக்கு நாடான காசா பகுதியை அமெரிக்கா கையகப்படுத்தும். காசாவில் இருந்து வரும் பாலஸ்தீன அகதிகள் அண்டை நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் பேரழிவை சந்தித்த காசா மீண்டும் கட்டியெழுப்பப்படும். காசாவை எங்களது கட்டுப்பாட்டில் வைத்திருப்போம். காசா பகுதியில் இருக்கும் வெடிக்காத குண்டுகள், பிற ஆயுதங்களை அகற்றும் பணியில் ஈடுபடுவோம். காசாவை மறுசீரமைப்போம்.
தேவைப்பட்டால் இப்பணிக்கு ராணுவத்தை ஈடுபடுத்துவோம். நீங்கள் நம்பமுடியாத சர்வதேச இடமாக மாற்றுவோம். எனது திட்டங்கள் மனிதாபிமான அடிப்படையிலும், உயரிய நோக்கிலும் இருக்கும்’ என்று தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள ஹமாஸ், காசா பகுதியில் இருப்பவர்கள் வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை என்று டிரம்ப் கூறிய அறிக்கைகளை நாங்கள் நிராகரிக்கிறோம். அவை பிராந்தியத்தில் குழப்பத்தையும் பதற்றத்தையும் உருவாக்குவற்கான வழிமுறையாக நாங்கள் கருதுகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளது.
என்னைக்கொன்றால் ஈரான் இருக்காது
அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் கடந்த ஜூலையில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தின் போது டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடந்தது. அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். இந்த தாக்குதல் தொடர்புள்ள பர்ஹாத் ஷாகேரி ஈரானில் தலைமறைவாக உள்ளார். ஆனால் பர்ஹாத் எங்களது நாட்டில் இல்லை என்று ஈரான் கூறியது. இந்நிலையில் நேற்று ஈரானுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ள டிரம்ப், நிருபர்களிடம் கூறுகையில், ‘என்னை ஈரான் கொன்றுவிட்டால், அவர்களை அழிப்பதற்கான அனைத்து அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன. அதிகபட்ச நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவில் கையெழுத்திட்டுள்ளேன். ஈரானில் எதுவும் எஞ்சியிருக்காது. என்னை படுகொலை செய்தால், துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் அமெரிக்க அதிபராக இருப்பார். அவர் நான் விட்டுச் சென்ற பணிகளை தொடருவார்’ என்று கூறினார். டிரம்பின் ஆவேசமான இந்த கருத்து சர்வதேச ஊடகங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
வெளிநாட்டு நன்கொடைக்கு கிரீன்லாந்து தடை
டென்மார்க்கிற்கு சொந்தமான பரந்த மற்றும் கனிம வளம் மிக்க ஆர்க்டிக் தீவை அமெரிக்கா கையகப்படுத்த விரும்புவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அரசியல் கட்சிகள் வெளிநாடு அல்லது பெயர் குறிப்பிடாதவர்களிடம் இருந்து நிதியை பெறுவதை தடை செய்யும் மசோதாவை கிரீன்லாந்து அரசு கொண்டுவந்துள்ளது. இந்த மசோதா நேற்று முன்தினம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இது உடனடியாக நடைமுறைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஈரான் நாணய மதிப்பு சரிவு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெஹ்ரானை இலக்காக கொண்ட அதிகபட்ச அழுத்தம் பிரசாரத்தை மீண்டும் தொடங்குவதற்கு உத்தரவிட்டதை அடுத்து ஈரானில் நாணய மதிப்பு வரலாறு காணாதஅளவுக்கு சரிந்தது. ஈரானின் நாணயமான 850000 ரியால் ஒரு அமெரிக்க டாலராக சரிந்தது. இது அவர்கள் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான பொருளாதார ஏற்ற இறக்கத்தை காட்டுகின்றது. இது 10 ஆண்டுகளுக்கு முன் இது 32,000 ரியாலாக இருந்தது.
யுஎஸ் எய்ட் ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு
அமெரிக்க அரசு சார்பில் உலகம் முழுவதும் செயல்பட்டு வந்த தொண்டு நிறுவனமான யுஎஸ் எய்ட் நிறுவனம் முடக்கப்பட்டு வருகின்றது. அதிபர் டிரம்ப் பதவியேற்ற உடன் வெளிநாட்டு உதவிகள் முடக்கப்பட்டது. இதனை அடுத்து ஆயிரக்கணக்கான யுஎஸ் எய்ட் ஊழியர்கள் ஏற்கனவே பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆன்லைனில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், அத்தியாவசிய ஊழியர்களை தவிர உலகெங்கிலும் உள்ள அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிறுவனத்தில் நேரடியாக பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள் விடுப்பில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் 30 நாட்களுக்குள் வீடு திரும்பவும் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
The post ஈரானுக்கு பொருளாதார தடை விதிப்பு; ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகல்: கல்வி, அறிவியல், யுனெஸ்கோ பங்களிப்பையும் மறுபரிசீலனை செய்ய டிரம்ப் அதிரடி appeared first on Dinakaran.