ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகள் எவ்வளவு என்பது குறித்த விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிடாமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று (பிப்.5) மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது முதல் 2 மணி நேரத்துக்கு ஒருமுறை பதிவான வாக்குகள் விபரம், தேர்தல் ஆணைய செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு பத்திரிகையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. மாலை 5 மணி அளவில் 64.02 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு ஒரு மணி நேரம் மட்டுமே வாக்குப்பதிவு நடந்த நிலையில், மொத்தம் எத்தனை சதவீத வாக்குகள் பதிவானது என்ற விவரம் இரவு 11 மணிக்குத்தான் தெரிவிக்கப்பட்டது. அதுவும் தோராயமாக 67.97 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது.