ஈரோடு: கர்நாடக சுயேச்சை பெண் வேட்பாளர் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளர் எண்ணிக்கை 46 ஆக குறைந்தது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி நடைபெறுகிறது. திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி மற்றும் சுயேச்சைகள் உள்பட 55 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. நேற்று முன்தினம் சுயேச்சையாக போட்டியிட்ட அதிமுகவை சேர்ந்த செந்தில் முருகன் உட்பட 8 பேர் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர்.
இதையடுத்து, 47 வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டது. திமுக வேட்பாளர் சந்திரகுமாருக்கு உதயசூரியன் சின்னமும், நாதக வேட்பாளருக்கு மைக் சின்னமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில், சுயேட்சையாக போட்டியிட கர்நாடக மாநிலம், பெங்களூரு, உதயா நகர், மஞ்சுநாத்சுவாமி நிலையம் பகுதியை சேர்ந்த பத்மாவதி என்ற பெண் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவும் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், வேறு மாநிலத்தை சேர்ந்த அவர் இந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட முடியாது என்றும், அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி, சுயேச்சை வேட்பாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நேற்று அதிகாலை 1.30 மணியளவில் பத்மாவதி வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் மனிஷ் அறிவித்தார். இதையடுத்து, வேட்பாளர்கள் எண்ணிக்கை 46 ஆக குறைந்தது. திமுக, நாதக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 46 பேர் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாக இறுதி செய்யப்பட்டது.
* சுயேச்சையாக போட்டியிட மனு அளித்த அதிமுக நிர்வாகி திமுகவில் இணைந்தார்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈரோடு, அக்ரஹார வீதியை சேர்ந்த அதிமுக எம்ஜிஆர் இளைஞரணி மாநகர துணை செயலாளராக பொறுப்பு வகித்து வந்த செந்தில் முருகன் சுயேச்சையாக வேட்பு மனுதாக்கல் செய்திருந்தார். இதையடுத்து அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் வேட்பு மனுவை வாபஸ் பெற்ற செந்தில் முருகன் நேற்று முன்தினம் இரவு திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், வீட்டு வசதித்துறை அமைச்சருமான சு.முத்துசாமி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
The post ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கர்நாடக பெண் மனு தள்ளுபடி 46 பேர் போட்டி என அறிவிப்பு appeared first on Dinakaran.