காசியாபாத்: உத்தரப் பிரதேசத்தின் சம்பல் பகுதிக்குச் செல்லும் வழியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் காஜிபூர் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து வாகனத்தில் இருந்து இறங்கிய ராகுல் காந்தி போலீஸாருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். என்றாலும் அவர் தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்படவில்லை.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட சம்பல் பகுதியை பார்வையிட ராகுல் காந்தி, அவரது சகோதரி பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இன்று (புதன்கிழமை) காலையில் காஜிபூர் வந்தடைந்தனர். ஆனால் அங்கு அவர்கள் தொடர்ந்து சம்பலுக்கு நுழையாமல் தடுக்கும் வகையில் போலீஸார் குவிக்கப்பட்டு, சாலையில் தடுப்புகள் போடப்பட்டிருந்தன.