புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் ஜெவாரில் நாட்டின் 6-வது செமிகண்டக்டர் ஆலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஹெச்சிஎல் மற்றும் ஃபாக்ஸ்கான் கூட்டு முயற்சியுடன் அமைக்கப்பட உள்ள இந்த ஆலை ஜெவார் விமானநிலையத்துக்கு அருகில் அமைய உள்ளது. இது 2027-ல் இருந்து இயங்கத் தொடங்கும்.
ஹார்ட்வேர் உருவாக்கம் மற்றும் உற்பத்தியில் நீண்ட கால வரலாறு கொண்டது ஹெச்சிஎல் நிறுவனம். ஃபாக்ஸ்கான், சர்வதேச அளவில் மிகப்பெரிய மின்பொருள் உற்பத்தி நிறுவனமாகும். இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து, யமுனா விரைவுச்சாலை தொழில்துறை மேம்பாட்டு ஆணையம் அல்லது YEIDA-வில் உள்ள ஜெவார் விமானநிலைத்துக்கு அருகில் செமிகண்டக்டர் ஆலையை அமைக்கவுள்ளது. இந்த சிப் உற்பத்தி நிறுவனம் சுமார் ரூ.37,000 கோடி முதலீட்டை ஈர்க்கும்.