சம்பல் (உ.பி.): உத்தர பிரதேச மாநிலம் சம்பல் நகரில் உள்ள முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட ஜமா மசூதியை ஆய்வு செய்ய சென்றபோது அதிகாரிகளுக்கும், உள்ளூர் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது கலவரமாக மாறியதில் 3 பேர் உயிரிழந்தனர். 30 போலீஸார் காயமடைந்த நிலையில் அப்பகுதியில் இன்று (நவ.25) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இணைய சேவை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துண்டிகப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கைகள்: கலவரத்தைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சம்பல் பகுதியில் 24 மணி நேரத்துக்கு இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் கற்கள், சோடா பாட்டில்கள் அல்லது வெடிக்கக் கூடிய பொருட்களை வாங்க, பதுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சம்பல் பகுதிக்குள் வெளியாட்கள், சமூக அமைப்புகளைச் சார்ந்தோர், மக்கள் பிரதிநிதிகள் முன் அனுமதியின்றி வரக்கூடாது என தடை விதித்துள்ளது.