உத்தர பிரதேசத்தில் பாஜக கூட்டணி வெறும் 18 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என சமீபத்திய கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. அதேசமயம் மெகா கூட்டணியில் காங்கிரஸும் இணைந்தால் பாஜக இதைவிடவும் மிக மோசமான தோல்வியை சந்திக்கும் எனவும் கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.
மக்களவைத் தேர்தல் தொடர்பாக இந்தியா டுடே கார்வி நிறுவனத்துடன் இணைந்து கருத்து கணிப்பு நடத்தியுள்ளது. நாட்டிலேயே அதிகமாக 80 தொகுதிகளை கொண்ட உ.பி.யின் பெறும் வெற்றியே மத்திய ஆட்சியை கைபற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த தேர்தலில் பாஜக உ.பி.யில் 80 தொகுதிகளில் 71 தொகுதிகளை கைபற்றி பெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், மக்களவை தேர்தல் தற்போது நடந்தால் யாருக்கு வாக்களிப்பீர்கள் எனற கேள்வியை முன் வைத்து கார்வி நிறுவனத்துடன் இணைந்து இந்தியா டுடே கருத்து கணிப்பு நடத்தியுள்ளது.
இதில் உத்தர பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ், ராஷ்ட்ரீய லோக்தளக் கூட்டணி 58 இடங்களில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணி வெறும் 18 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் எனவும், காங்கிரஸ் 4 இடங்களை கைபற்றும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேசமயம் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கூட்டணியில் காங்கிரஸ் இணைந்தால் பாஜக வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடியும் எனவும் கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. மீதமுள்ள 75 தொகுதிகளையும் மெகா கூட்டணி கைபற்றும் எனவும் கருத்து கணிப்பு கூறுகிறது.
வாக்கு சதவீதத்தை பொறுத்தவரையில் கடந்த தேர்தலில் 43.2 சதவீத வாக்குகளை பெற்ற பாஜக இந்த முறை 36 சதவீத வாக்குகளை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை 42.8 சதவீத வாக்குகளை பெற்ற சமாஜ்வாதி – பகுஜன் சமாஜ் கூட்டணி, தற்போது 46 சதவீத வாக்குகளை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் வாக்குககள் 7.5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயரும் எனவும் இந்தியா டுடே கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.