மனித இனம் உயிர் வாழ்வதற்குத் தேவையானவற்றில் மிக முக்கியமானதாகக் கருதப்படும் காற்றின் தரம் தொடர்ந்து மாசடைந்து வருவதை ஆண்டுதோறும் வெளியிடப்படும் ஆய்வறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. 2021-ஆம் ஆண்டுக்கான சர்வதேச ஆய்வறிக்கையில், காற்று மிகவும் மாசடைந்த 100 நாடுகளின் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 63 நகரங்கள் இடம் பெற்றுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. உலக நாடுகளில் மிகவும் மாசுபட்ட தலைநகரங்களின் வரிசையில் புதுதில்லி தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதலிடத்திலேயே உள்ளது என்பதையும் அந்த ஆய்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
சுவிட்ஸர்லாந்து நாட்டைச் சேர்ந்த “ஐக்யூ ஏர்’ என்ற அமைப்பு உலகளாவிய காற்றின் தரம் குறித்த இந்த ஆய்வறிக்கையை கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. 117 நாடுகளில் உள்ள 61,475 நகரங்களில் காற்றின் தரம் குறித்து மிக விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உலகம் முழுவதும் காற்றின் தரத்தை ஆய்வு செய்யும் அரசு அமைப்புகள், அரசு சாரா நிறுவனங்கள், ஆராய்ச்சி நிலையங்கள், கல்விக்கூடங்கள், தனிநபர்கள் திரட்டிய தகவல்கள் மூலம் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது.
உலகில் மிகவும் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் ராஜஸ்தானின் பிவாடி முதலிடத்திலும், உத்தர பிரதேசத்தின் காஜியாபாத் இரண்டாவது இடத்திலும் உள்ளன. உத்தர பிரதேசத் தலைநகர் லக்னெv, அந்த மாநிலத்தின் கான்பூர், மீரட், ஆக்ரா, வராணசி, நொய்டா உள்ளிட்ட 14 நகரங்கள் மிகவும் மாசடைந்த 100 நகரங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இதன்மூலம், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள நகரங்களில் காற்றின் தரம் எந்த அளவுக்கு மோசமாக உள்ளது என்பதையும், இதுவிஷயத்தில் மாநில அரசு தீவிரமாகக் கவனம் செலுத்தவில்லை என்பதையும் அறிந்துகொள்ள முடிகிறது.
காற்றின் தரம் பிஎம் 2.5 என்ற அளவுக்குள் இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்துள்ளது. ஆனால், இந்த 14 நகரங்களில் நிர்ணய அளவைவிட 10-15 மடங்கு அதிகமாக காற்று மாசடைந்துள்ளது. எனினும், உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்துள்ள இந்த அளவீட்டுக்குள் உலகின் எந்தவொரு நகரமும் இல்லை என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதால் நாம் ஓரளவு திருப்திபட்டுக் கொள்ளலாம்.
கடந்த 2020-ஆம் ஆண்டில் கரோனா தீநுண்மிப் பரவல் காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால், உலகின் பல நகரங்களில் காற்றின் தரம் சற்று மேம்பட்ட போதிலும் அது தொடர்ந்து நீடிக்கவில்லை. உலக அளவில் தற்போது சுகாதாரத்துக்கு பெரும் அச்சுறுத்தலாகத் திகழ்வது காற்று மாசுதான். காற்று மாசால் நுரையீரல் கோளாறுகள், காசநோய், புற்றுநோய் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டு, உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சுமார் 70 லட்சம் பேர் மரணமடைகின்றனர்.
அவ்வப்போது எழுந்து அடங்கும் தீநுண்மிகளால் ஏற்படக்கூடிய உயிரிழப்புகளைவிட, காற்று மாசால் இறப்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்பதை நாம் கவனத்தில் கொண்டாக வேண்டும். மேலும், காற்று மாசு, உலகின் ஒட்டுமொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதத்தில் ரூ. 60,000 கோடி அளவுக்கு பொருளாதாரப் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரையில், வாகனங்கள், மின்சார ஜெனரேட்டர்கள், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை, சமையலுக்காக விறகுகளை எரிப்பது, புதிய கட்டுமானப் பகுதிகளிலிருந்து கிளம்பும் தூசு, பயிர் கழிவுகளை எரித்தல் போன்றவற்றால் காற்று பெரிதும் மாசடைகிறது.
சுற்றுச்சூழலுக்கும் மக்களின் உடல்நலத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ள காற்று மாசைக் குறைக்க மத்திய – மாநில அரசுகள் உடனடியாக உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம். தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை, கட்டுமானத் தூசு ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய திட்டங்களை வகுத்து, அவற்றை முறையாகச் செயல்படுத்துவதில் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
அதோடு, பேட்டரியால் இயங்கும் மின் வாகனங்களை மக்கள் அதிகளவில் பயன்படுத்துவதற்கு அரசு ஊக்கமளிக்க வேண்டும். இத்தகைய வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க அரசு மானிய உதவியும் அளிக்கலாம். மிக முக்கியமாக, பொதுப் போக்குவரத்தை மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் விதத்தில் அதை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இதேபோல, அடர்ந்த வனப்பகுதிகளில் ஏற்படும் திடீர் தீயைக் கட்டுப்படுத்த நவீன உத்திகளைக் கண்டறிந்து, அவற்றை உலக நாடுகள் செயல்படுத்த முன்வர வேண்டும். வேளாண்மைக் கழிவுகள், குப்பைகள் எரிக்கப்படுவதைக் கட்டுப்படுத்தவும் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் காற்றின் தரத்தைக் கண்காணிக்கும் ஆய்வு நிலையங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.
திடீரென தலைதூக்கும் பல்வேறு வகையான தீநுண்மிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் ஏற்கெனவே தத்தளித்து வருகின்றன. ஆனால், கண்ணுக்குப் புலப்படாத இத்தகைய தீநுண்மிகளால் ஏற்படக்கூடிய ஆபத்தைவிட, காற்று மாசால் மனிதகுலம் பேராபத்தை எதிர்கொண்டு வருகிறது என்பதை உணர்ந்து அரசுகள் ஒருங்கிணைந்த நடவடிக்கைளை எடுக்க வேண்டும்.
காற்று மாசைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் ஆக்கபூர்வ நட
வடிக்கைளை எடுத்தால் மட்டுமே, நமது வருங்கால சந்ததியினர் நோய்களின்றி நிம்மதியாக வாழ முடியும். இதுவிஷயத்தில் நமது மத்திய – மாநில அரசுகளும் உடனடியாகக் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை எடுத்தால்தான் சுத்தமான காற்றை நம்மால் சுவாசிக்க முடியும்!