உதயநிதி அழைத்தால் தேர்தல் பிரச்சாரம் செல்வீர்களா என்ற கேள்விக்கு நடிகர் சந்தானம் பதிலளித்துள்ளார்.
காமெடி நடிகரில் இருந்து மாறி நாயகனாக நடிக்க தொடங்கிவிட்டார் சந்தானம். அவருடைய நடிப்பில் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படம் மே 16-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து சிம்புவுடன் மீண்டும் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் சந்தானம்.
தற்போது சிம்புவுக்காக காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பது போல், உதயநிதி கேட்டால் அவருக்காக தேர்தல் பிரச்சாரம் செய்வீர்களா என்று சந்தானத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சந்தானம், “அரசியலில் யார் கூப்பிட்டாலும் ஒரு விஷயத்தில் தெளிவாக இருக்கிறேன். நான் உழைத்தால் எனக்கு சாப்பாடு, நீங்கள் உழைத்தால் உங்களுக்கு சாப்பாடு. இதைத் தாண்டி எதுவுமே கிடையாது. நட்பு ரீதியாக என்னால் இதெல்லாம் பண்ண முடியும், முடியாது என்று இருக்கிறது.
சிம்பு சார் அழைத்ததால் காமெடி கேரக்டரில் நடிக்கிறேன். அவரோ இப்போது சந்தானத்தை வைத்து எப்படியெல்லாம் காமெடி பண்ண முடியும் என்ற சுதந்திரத்தை எனக்கு கொடுத்திருக்கிறார். பழைய மாதிரி காமெடி கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று வற்புறுத்தவில்லை. உதயநிதி சார் அழைத்தால் என்னால் இதெல்லாம் முடியும், முடியாது என்று சொல்வேன். அது அவருக்கு ஒ.கே என்றால் கண்டிப்பாக பிரச்சாரம் செய்வேன்” என்று பதிலளித்துள்ளார் சந்தானம்.