புதுடெல்லி: சர்வதேச சைபர் மோசடி தொடர்பாக 4 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதை தடுக்க சிபிஐ தரப்பில் 'ஆபரேஷன் சக்ரா' என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி அனைத்து மாநில காவல் துறைகள் மற்றும் சர்வதேச காவல் அமைப்பான இன்டர்போல், அமெரிக்காவின் எப்பிஐ, கனடா காவல் துறை, ஆஸ்திரேலிய காவல் துறை, பல்வேறு தனியார் புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து சிபிஐ செயல்பட்டு வருகிறது.
'ஆபரேஷன் சக்ரா' திட்டத்தின் ஒரு பகுதியாக மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மேற்குவங்கம் உட்பட பல்வேறு மாநிலங்களில் 12 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அண்மையில் சோதனை நடத்தினர். அப்போது சர்வதேச அளவில் சைபர் மோசடிகளில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 2 பேர் மும்பையை சேர்ந்தவர்கள். இதர 2 பேர் உத்தர பிரதேசத்தின் மொராதாபாத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.