லக்னோ: சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா மற்றும் ஊடகப் பொறுப்பாளர் நவீன் ஜிண்டால் ஆகியோரின் நபிக்கு எதிரான கருத்தை கண்டித்தும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக தலைவர்களான நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் இருவரையும் கைது செய்யக் கோரி ஜூன் 10 வெள்ளிக்கிழமை அன்று தொழுகைக்குப் பிறகு நாடு முழுவதும் பல நகரங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அமைதியாக தொடங்கிய போராட்டம் வன்முறையாக மாறியது. உ.பி.யில் எட்டு மாவட்டங்களில் வெடித்த வன்முறை போராட்டங்களை அடுத்து, அங்கு நடந்த வன்முறைகள் தொடர்பாக உத்தரபிரதேச காவல்துறை மொத்தம் 13 எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில் 316 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
13 எப்ஐஆர்கள் பதிவு – 316 பேர் கைது:
இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை மாலை காவல்துறை கூடுதல் இயக்குநர் ஜெனரல் (சட்டம்-ஒழுங்கு) பிரசாந்த் குமார் வெளியிட்ட அறிக்கையில், மாநிலத்தின் 8 மாவட்டங்களில் இருந்து 316 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் இது தொடர்பாக 9 மாவட்டங்களில் 13 எப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார்.
மாவட்ட வாரியாக விவரங்களை அளித்த குமார், “அலகாபாத்தில் 92 பேர், சஹரன்பூரில் 79 பேர், ஹத்ராஸில் 51 பேர், அம்பேத்கர் நகரில் 34 பேர், மொராதாபாத்தில் 35 பேர், ஃபிரோசாபாத்தில் 15 பேர், அலிகாரில் 6 பேர், ஜலானில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.
அதேபோல மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர்களின் விவரங்களை அளித்த குமார், அலகாபாத் மற்றும் சஹரன்பூரில் தலா மூன்று எஃப்ஐஆர்களும், ஃபிரோசாபாத், அலிகார், ஹத்ராஸ், மொராதாபாத், அம்பேத்கர்நகர், கெரி மற்றும் ஜலான் ஆகிய இடங்களில் தலா ஒரு எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 316 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
போலீசார் காயம்:
மொரதாபாத்தில் இரண்டு காவலர்கள், அம்பேத்கர் நகரில் 8 போலீசார் மற்றும் அலகாபாத்தில் 3 போலீசார் மற்றும் பிற நிர்வாக அதிகாரிகள் உட்பட மொத்தம் 13 போலீசார் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு ஏற்பட்ட வன்முறையில் காயமடைந்ததாகவும் ஏடிஜி கூறினார்.
வாகனங்கள் தீ வைக்கப்பட்டது:
இந்த போராட்டத்தின் போது, சஹாரன்பூரில் பொதுமக்களின் இரண்டு வாகனங்கள் சேதமடைந்ததாகவும், அலகாபாத்தில் ஆறு வாகனங்கள் (நான்கு மோட்டார் சைக்கிள்கள், ஒரு பிஏசி டிரக் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள்) சேதமடைந்ததாகவும், இதில், ஐந்து வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதாகவும், மூன்று வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும் பிரசாந்த் குமார் கூறினார்.
கடும் நடவடிக்கை எடுங்கள் -முதல்வர் உத்தரவு:
ஜூன் 3-ம் தேதி கான்பூர் மாவட்டத்தில் நடந்த வன்முறை மற்றும் ஜூன் 10-ம் தேதி (வெள்ளிக்கிழமை) பல்வேறு மாவட்டங்களில் தொழுகைக்குப் பிறகு ஏற்பட்ட வன்முறை சம்பவங்களை குறித்து கேட்டறிந்த உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை மற்றும் நிர்வாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சமூகவிரோத சிந்தனை கொண்ட அனைவருக்கும் இது ஒரு எடுத்துக்காட்டாக அமைய வேண்டும் என்றும், இனி எவரும் மாநில அமைதியை கெடுக்க நினைக்க கூடாது எனத் தெரிவித்துள்ளார்.
யோகி ஆதித்யநாத் சனிக்கிழமையன்று மாவட்ட நீதிபதிகள், காவல்துறை கண்காணிப்பாளர்கள், மூத்த காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் உயர் போலீஸ் மற்றும் நிர்வாக அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் சட்டம் ஒழுங்கு குறித்து ஆய்வு செய்தார்.
கடந்த காலங்களில் கான்பூர், அலகாபாத், சஹரன்பூர், மொராதாபாத், ஹத்ராஸ், ஃபிரோசாபாத், அம்பேத்கர் நகர் போன்ற மாவட்டங்களில் சமூக விரோதிகளால் அமைதி மற்றும் நல்லிணக்க சூழலை சீர்குலைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
புல்டோசர் மூலம் வீடுகள் இடிப்பு:
இதற்கிடையில், ஜூன் 10 அன்று சஹாரன்பூரில் வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இருவரின் வீடுகள் சனிக்கிழமை புல்டோசர்களைக் கொண்டு காவல்துறையினரால் இடித்துத் தள்ளப்பட்டன. மறுபுறம், கான்பூரில், முகமது இஷ்தியாக்கின் வீட்டையும் போலீசார் இடித்துள்ளனர். ஜூன் 3ஆம் தேதி கான்பூரில் நடந்த வன்முறைப் போராட்டங்களில் முக்கிய குற்றவாளியான ஜாபர் ஹயாத் ஹஷ்மிக்கு இஷ்தியாக் தொடர்பு இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.
மேலும் படிக்க: அரபு நாடுகளின் அழுத்தம்; சாட்டையை சுழற்றிய பாஜக
இந்த வரிசையில், ஞாயிற்றுக்கிழமை, பிரயாக்ராஜ் நிர்வாகம் மாணவர் சமூக ஆர்வலர் மாணவர் அஃப்ரீன் பாத்திமாவின் வீடும் சட்டவிரோதமாக கட்டப்பட்டு உள்ளதாக அறிவித்தது. சனிக்கிழமை இரவு அஃப்ரீன் பாத்திமாவுக்கு ஒரு நோட்டீசை அனுப்பியது. அதில் ஞாயிற்றுக்கிழமை காலை அவரது வீட்டை இடிக்க இருப்பதாகவும், எனவே, வீட்டை காலி செய்யும்படியும் அதில் கூறப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று புல்டோசர் கொண்டு அவரது வீடு முழுவதும் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.
அனைவரும் முஸ்லிம்கள்:
அதேபோல ஜூன் 4 அன்று, 1,000க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத நபர்களுக்கு எதிராக காவல்துறை மூன்று FIR-களை பதிவு செய்தது. அவர்களில் 55 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் முஸ்லிம்கள்.
பல மாநிலங்களில் நடந்த போராட்டம்:
நபிக்கு எதிரான கருத்தை கண்டித்து ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடந்த போராட்ட வன்முறை ஆர்ப்பாட்டத்தில் 2 பேர் கொல்லப்பட்டனர். உத்தரபிரதேசத்தில் அலகாபாத் மற்றும் மேற்கு வங்கத்தில் ஹவுராவிலும் போராட்டங்கள் வன்முறையாக மாறியது. ஸ்ரீநகரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டனர். அதேபோல் டெல்லி மற்றும் மத்திய பிரதேசத்தின் சில பகுதிகள், தெலுங்கானா, குஜராத், பீகார் மற்றும் மகாராஷ்டிராவின் சில பகுதிகளிலும் போராட்டங்கள் அமைதியாக நடந்தன.