டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள மனா கிராமத்தில் நேற்று ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய தொழிலாளர்களில் மேலும் 14 பேர் இன்று (சனிக்கிழமை) மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் 8 பேர் பனிச்சரிவில் சிக்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களையும் மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
நடந்தது என்ன? உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத் கோயிலில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மனா கிராமத்தில் நேற்று கடுமையான பனிச்சரிவு ஏற்பட்டது. எல்லை சாலைகள் அமைப்பு (பிஆர்ஓ) முகாமுக்கு அருகே இந்த பனிச்சரிவு ஏற்பட்டதால் அங்கு சாலை கட்டுமானத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பலர் சிக்கி கொண்டனர். அவர்கள் தங்கியிருந்த வீடுகளும் பனிச்சரிவால் மூடப்பட்டன. பனிச் சரிவில் சிக்கிய 57 பேரில் 32 தொழிலாளர்கள் மீட்கப்பட்டதாக நேற்று தெரிவிக்கப்பட்டது.