உத்திரமேரூர்: சுடுகாடுக்கு பயன்படுத்தி வந்த இடத்தை தனிநபர் ஒருவர் வாங்கியதால், இறந்தவரின் சடலத்தை அடக்கம் செய்ய முடியாமல் கிராம மக்கள் விடிய விடிய தவித்தனர். இது, உத்திரமேரூர் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உத்திரமேரூர் அருகே சித்தமல்லி கிராமத்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இதே கிராமத்தை சேர்ந்த பெருமாள் (95) என்பவர் வயது மூப்பு காரணமாக நேற்று முன்தினம் மாலை மரணம் அடைந்தார். இப்பகுதியில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு, நீண்ட காலமாக ஊருக்கு வெளியே ஒரு இடத்தை பயன்படுத்தி வந்தனர். இதற்கிடையே, கடந்த சில ஆண்டுகளாக அந்நிலத்தை ஒரு தனிநபர் வாங்கி, அதில் உடல்களை அடக்கம் செய்வதற்கு நீதிமன்ற தடை வாங்கியுள்ளார்.
இதனால், அந்த இடத்தில் பெருமாளின் சடலத்தை அடக்கம் செய்யக்கூடாது என்று போலீசார் தெரிவித்தனர். இதனால் நேற்று முன்தினம் இரவு பெருமாள் குடும்பத்தினர், கிராம மக்கள் மற்றும் போலீசாருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வருவாய்துறை அதிகாரிகள் விரைந்து வந்து, கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில், தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட 10 சென்ட் நிலம் கிராமத்திற்கு வழங்கப்பட்டது. அங்கு போலீசார் முன்னிலையில் பெருமாள் உடல் அடக்கம் செய்யப்பட்டது. மேலும், நீதிமன்றத்தை அணுகி சுடுகாடு நிலத்தை மீட்போம் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
The post உத்திரமேரூர் அருகே பரபரப்பு: சடலத்தை புதைக்க இடமின்றி விடியவிடிய தவித்த மக்கள் appeared first on Dinakaran.