சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில், இன்று (நவ.29) பகல் 2.30 மணிக்கு ஃபென்ஜல் புயல் உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு அதி கனமழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 13 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, “ஃபென்ஜல்” புயலாக இன்று (நவ.29) பகல் 2.30 மணிக்கு வலுப்பெற்றது. திரிகோணமலைக்கு வட-வடகிழக்கே சுமார் 310 கி.மீ., தொலைவிலும், நாகப்பட்டினத்திலிருந்து கிழக்கே 260 கி.மீ., தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே 270 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 300 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.