*கூட்டுறவு இணைப்பதிவாளர் அறிவுறுத்தல்
ஊட்டி : உறுப்பினர்கள் கூட்டுறவு சங்கங்களில் கடன் பெறுவது தங்கள் உரிமை. பெற்ற கடனை உரிய தவணை காலத்திற்குள் திருப்பி செலுத்துவது அவர்களின் கடமை என ஜெகதளா கிராமத்தில் உறுப்பினர் கல்வி திட்ட நிகழ்ச்சியில் இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பில் குன்னூர் பகுதியில் உள்ள ஜெகதளா தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தின் செயல் எல்லையில் அமைந்துள்ள ஜெகதளா கிராமத்தில் உறுப்பினர் கல்வி திட்ட நிகழ்ச்சி நடந்தது. நீலகிரி மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் தயாளன் தலைமை வகித்து பேசியதாவது:
உறுப்பினர்கள் கூட்டுறவு சங்கங்களில் கடன் பெறுவது தங்கள் உரிமை. பெற்ற கடனை உரிய தவணை காலத்திற்குள் திருப்பி செலுத்துவது அவர்களின் கடமை.
அவ்வாறு செலுத்த தவறும் பட்சத்தில் அக்கடனுக்காக தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 1983 பிரிவு 90ன் படி தாவா நடவடிக்கை மேற்கொள்ளுவது சங்கத்தின் உரிமை ஆகும். இந்த சங்கத்தில் உறுப்பினர்கள் பெற்ற கடன்கள் ரூ.1.26 கோடி அளவிற்கு தவணை தவறியுள்ளது.
அதன் காரணமாகவே உறுப்பினர்களின் இட்டு வைப்புகளை திருப்பி செலுத்துவது சிரமமாக உள்ளது. எனவே உறுப்பினர்கள் அனைவரும் பெற்ற கடன்களை உடன் சங்கத்திற்குச் திருப்பி செலுத்த வேண்டும். இச்சங்கமானது ஜெகதளாவில் தொடர்ந்து செயல்பட வேண்டும் எனில் உறுப்பினர்கள் தங்கள் பெற்ற கடன்களைத் திருப்பிச் செலுத்தி சங்கத்தின் நிதிநிலையை மேம்படுத்தி சங்கத்தைக் காப்பாற்றும் பொறுப்பு உறுப்பினர்களுக்கு உள்ளது. அவ்வாறு செலுத்த தவறும் பட்சத்தில் இச்சங்கம் அருகில் உள்ள இதர சங்கத்துடன் இணைக்கப்படும்.
அவ்வாறு இணைக்கப்பட்டால் இப்பகுதியில் வசிக்கும் உறுப்பினர்களாகிய விவசாயிகள் எடபள்ளி அல்லது உபதலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு சென்று மட்டுமே விவசாய கடன் கோரி விண்ணப்பித்து பெற முடியும். சங்கத்தில் நிர்வாக குழு செயல்பட்ட காலங்களில் வழங்கப்பட்ட கடன்களே அதிக அளவில் தவணை தவறியுள்ளது.
நிர்வாக குழு செயல்பட்ட விதம் குறித்து ஆராய தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 1983 பிரிவு 82ன் படி விரிவான விசாரணை மேற்கொள்ள விசாரணை அலுவலராக கூட்டுறவு சார்பதிவாளர் நியமிக்கப்பட்டுள்ளார். விசாரணையில் ஏதேனும் முறைகேடுகள் நடைபெற்றதாக தெரிய வரும் பட்சத்தில் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் பிரிவு 36ன் படி நிர்வாக குழு உறுப்பினர்கள் நிரந்தரமாக தகுதி நீக்கம் செய்யப்படுவர்கள்.
அவ்வாறு தகுதி நீக்கம் செய்யப்படுபவர்கள் ஊரக உள்ளாட்சி தேர்தல் உட்பட எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட முடியாது. இவ்வாறு, இணைப்பதிவாளர் தயாளன் பேசினார்.
தொடர்ந்து, தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் மற்றும் விதிகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. முன்னதாக இந்நிகழ்ச்சிக்கு நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியர் கௌரிசங்கர், சங்கத்தின் செயலாட்சியர் நிசார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை சார்பில் நடத்தப்படும் முதல்வர் மருந்தகம் குறித்தும், அதன் மூலம் ஏழை எளிய நடுத்தர வர்கத்தை சேர்ந்த மக்கள் பெறும் பயன்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
முன்னதாக ஜெகதளா ஊர் தலைவர் ராஜன் வரவேற்புரை வழங்கினார். மத்திய கூட்டுறவு வங்கி சரக மேற்பார்வையாளர் பால்முருகன், மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக வழங்கப்படும் பல்வேறு விதமான கடன்கள் மற்றும் சேவைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சங்க செயலாளர் கண்ணன், சங்கத்தின் உறுப்பினர்கள், பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக சங்கத்தின் எழுத்தர் சோனியா நன்றி கூறினார்.
The post உறுப்பினர் கல்வி திட்ட நிகழ்ச்சி கூட்டுறவு கடன்களை உாிய காலத்திற்குள் திருப்பி செலுத்துவது உறுப்பினர் கடமை appeared first on Dinakaran.