புதுடெல்லி: உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் கோனேரு ஹம்பி, சர்வதேச மாஸ்டர் திவ்யா தேஷ்முக் மோதிய 2-வது போட்டியும் டிராவில் முடிவடைந்தது.
இதையடுத்து இன்று நடைபெறும் டை-பிரேக்கர் போட்டியின் மூலம் சாம்பியன் பட்டம் வெல்வது யார் என்பது தீர்மானிக்கப்படும்.
மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள பதுமி நகரில் நடந்து வருகிறது. இதன் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் கோனேரு ஹம்பி – திவ்யா தேஷ்முக் மோதினர். இறுதிச்சுற்று இரு ஆட்டங்கள் கொண்டதாக நடத்தப்பட்டது.
நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிப்போட்டிக்கான முதல் ஆட்டத்தில் ஆடிய திவ்யா தேஷ்முக், ஹம்பியுடன் 41-வது நகர்த்தலில் டிரா செய்தார். இதனால் இருவருக்கும் தலா அரை புள்ளி வழங்கப்பட்டது. இந்த ஆட்டம் சுமார் 4 மணி நேரம் நீடித்தது.