பீஜிங்: புதிய வகை கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு பரவுகிறது என்பதை சீன ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சீனாவில் இருந்து 2019 டிசம்பரில் பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் ஆட்டிப்படைத்தது. இந்த நிலையில் மீண்டும் ஒரு புதிய கொரோனா வைரஸ் பரவுவதை சீனா கண்டுபிடித்து உள்ளது. சீனாவின் நச்சுயிரியல் வல்லுநரான ஷி ஷெங்லி தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் புதிய வகை வைரஸ் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த புதிய வைரஸ் மெர்பெகோவைரஸ் குடும்பத்தை சேர்ந்த மெர்ஸ் -கோவிட் துணை வகையைச் சேர்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது எச்கேயு5 கொரோனா வைரஸ் பரம்பரையைச் சேர்ந்தது என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த புது வைரஸ் முதன்முதலில் ஹாங்காங்கில் உள்ள ஜப்பானிய பிபிஸ்ட்ரெல் வவ்வால்களில் அடையாளம் காணப்பட்டது.
எச்கேயு5-கோவிட்-2 மனிதர்களுக்கு நேரடியாகவோ அல்லது இடைநிலை உயிரினங்கள் மூலமாகவோ பரவ அதிக வாய்ப்புள்ளது. இந்த வைரஸ் கொரோனாவை போல மனிதர்களின் சுவாச மண்டலத்தை தாக்கி பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. இருப்பினும், இந்த வைரஸின் வீரியம் கொரோனாவை விடக் குறைவு.
இந்த வைரஸ் மனிதர்களைப் பாதிக்கக்கூடும் என்றாலும், கொரோனாவைப் போல ஆபத்தானது அல்ல. கொரோனா வகை வைரஸ் உலகெங்கும் பேரழிவை ஏற்படுத்திய நிலையில், அனைத்து வைரஸ்களும் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு எளிதில் பரவாது என்று விளக்கப்பட்டது.
The post உலகிற்கு மீண்டும் ஒரு புதிய ஆபத்து வவ்வால்கள் மூலம் பரவும் புதிய கொரோனா வைரஸ்: சீன ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.