ஹாலிவுட் சினிமா ரசிகர்களுக்கு, குறிப்பாக க்ரைம் த்ரில்லர் படங்களை விரும்பிப் பார்ப்பவர்களுக்கு ஹிட்ச்காக் இயக்கிய ‘சைக்கோ’ (1960), ‘டெக்சாஸ் செயின்ஸா மாஸக்கர்’ (1974), ‘தி சைலன்ஸ் ஆஃப் தி லாம்ப்ஸ்’ (1991) ஆகிய படங்களை தெரியாமல் இருக்காது. இந்த மூன்று படங்களுக்கு ஒரு முக்கிய தொடர்பு உள்ளது. இந்த மூன்று கதைகளுமே 1950களில் அமெரிக்காவை உலக்கிய சைக்கோ கொலையாளியான ‘ப்ளைன்ஃபீல்ட் பட்சர்’ என்று அழைக்கப்படும் எட் கெய்னின் கதாபாத்திரத்தை தழுவி எடுக்கப்பட்டவை.
அமெரிக்காவின் விஸ்கான்ஸின் மாகாணத்தைச் சேர்ந்த எட் கெய்ன் வழக்கமான சீரியல் கில்லராக வகைப்படுத்திவிட முடியாது. காரணம் அவர் செய்ததாக நிரூபிக்கப்பட்ட கொலைகள் இரண்டுதான். ஆனால் கல்லறைகளில் இருந்து சடலங்களை தோண்டி எடுத்து அவற்றிலிருந்து உறுப்புகளை நினைவுச் சின்னங்களாக சேகரித்தும், மனித தோல்களை உடைகளாக செய்து அணிந்தும் அதிர வைத்தவர்.