சென்னை: “சபாநாயகர் அப்பாவு மீது இப்படி ஒரு தீர்மானம் கொண்டு வந்தோமே என்று எதிர்காலத்தில் அதிமுகவினர் மனச்சாட்சி உறுத்தும். இது பேரவைத் தலைவர் மீது எய்தப்பட்ட அம்பாகவே கருதுகிறோம். இந்த அம்பை இந்த அவை ஏற்காது” என்று நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
பேரவைத் தலைவரை பதவியில் இருந்து நீக்கக் கோரும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை இன்று (மார்ச் 17) தமிழக சட்டப் பேரவையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்டு வந்தனர். இந்தத் தீர்மானம் தோல்வி அடைந்தது. முன்னதாக, இந்தத் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது முதல்வர் ஸ்டாலின் பேசியது: “மக்கள் நம்பிக்கையை இழந்தவர்களால் இப்படி ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டிருப்பதைப் பார்த்து மக்களே நகைப்பார்கள் என்பதுதான் உண்மை. கடந்த 2017-ம் ஆண்டு, இதேபோன்ற ஒரு தீர்மானம் வந்தது.