ஊட்டி : ஊட்டி எல்க்ஹில் ஸ்ரீ பால தண்டாயுதபாணி சுவாமி கோயில் திருக்குடமுழுக்கு என்னும் மகா கும்பாபிஷேகம் வரும் 16ம் தேதி நடக்கிறது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடல் மட்டத்தில் இருந்து 7000 ஆயிரம் அடி உயரத்தில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியான திருமான் குன்றம் என்று அழைக்கப்படும் எல்க்ஹில் மலையில் பழமையான ஸ்ரீ பால தண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்ளது.
பால தண்டாயுதபாணியாக வீற்றிருந்து தன்னை நாடி வருவோருக்கு அருளை வாரி வழங்கி வருகிறார். இந்த முருகன் கோவில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள கோவிலாகும். இந்த கோயிலில் பிரபலமான மலேசியா முருகன் கோயிலில் உள்ளதை போன்ற 44 அடி உயர முருகன் சிலை உள்ளது.
இங்கு ஆண்டுதோறும் தை பூசத்தன்று நடக்கும் தைபூச திருத்தேர் ஊர்வலம் பிரசித்தி பெற்றதாகும். இந்நிலையில் எல்க்ஹில் முருகன் கோயிலுக்கு திருப்பணி செய்து குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு அழகுற வர்ணம் தீட்டப்பட்டது. இப்பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இதனை தொடர்ந்து எல்க்ஹில் முருகன் கோயில் திருக்குட நன்னீராட்டு பெருஞ்சாந்தி பெருவிழா எனப்படும் மகா கும்பாபிஷேகம் வரும் 16ம் தேதி நடைபெற உள்ளது. முன்னதாக 13ம் தேதி காலை 10 மணிக்கு அருள்மிகு மாரியம்மன் கோயிலில் இருந்து முலைப்பாரிகைகளுடன் தீர்த்த குடங்கள் நகர்வலமாக எடுத்து திருக்கோயிலை அடைதல் நிகழ்வு நடக்கிறது.
14ம் தேதி காலை 10.15 மணிக்கு மூத்த விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி ேஹாமம், மகா கணபதி ஹோமம், நககிரக யாகங்கள், தீபாராதனை நடக்கிறது. பிற்பகல் 2 மணிக்கு மேல் அஷ்டபந்தன மருந்து சாத்துதல், மாலை 5 மணிக்கு கணபதி பூஜை, முதல் கால வேள்வி, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. 15ம் தேதி காலை 8.50 மணி முதல் திருமுறை பாராயணம், விநாயகர் வழிபாடு, 2ம் கால வேள்வி நடக்கிறது.
மாலை 4 மணிக்கு மூன்றாம் கால வேள்வி மற்றும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. 16ம் தேதி ஞாயிற்றுகிழமை காலை 5.30 மணிக்கு மேல் நான்காம் கால வேள்வி, மூலத் திருமேனிகளுக்கு இறைசக்தி சேர்த்தல், மூலிகை பொருட்கள் வேள்வி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக காலை 10.15 மணிக்கு விமான கலசங்களுக்கு திருக்குடமுழுக்கு என்னும் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
தொடர்ந்து அபிஷேகம் அலங்காரம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவில் பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், ராமானந்த குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் பங்கேற்கின்றனர். மதியம் 3 மணிக்கு திருவீதி உலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ஜெகநாதன் தலைமையில் இந்து சமய அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.
The post ஊட்டி எல்க்ஹில் மலையில் பால தண்டாயுதபாணி சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா appeared first on Dinakaran.