சென்னை: காவலர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட காவல் ஆணையத்தின் பரிந்துரைகளை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்தியக் காவல் படைகள் மற்றும் பிற மாநிலங்களின் காவலர்களுடன் ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் காவலர்களுக்கு மிகக்குறைந்த ஊதியம் மட்டும் தான் வழங்கப்படுகிறது என்றும், அதை உடனடியாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஐந்தாவது காவல் ஆணையம் பரிந்துரைத்திருக்கிறது. ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு 50 நாட்களுக்கும் மேல் ஆகும் நிலையில், அதன் பரிந்துரைகளை செயல்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.