ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே 30 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய நொச்சிப்பட்டி ஏரி, கரையின் தடுப்புச்சுவர் உடைந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி விளைநிலத்தில் புகுந்ததால் 50 ஏக்கரில் பயிரிட்டிருந்த நெற்பயிர் சேதமடைந்தது. அதிகாரிகளின் அலட்சியத்தை கண்டித்து, விவசாயிகள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த நொச்சிப்பட்டியில் 54 ஏக்கர் பரப்பில் ஏரி உள்ளது. வறண்டு கிடந்த இந்த ஏரி, கடந்த மாதம் பெய்த பெஞ்சல் புயல் மழை காரணமாக 30 ஆண்டுகளுக்கு பிறகு முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன், ஏரியின் கோடி பகுதியில் உள்ள கான்கிரீட் தடுப்பு சுவரின் அடியில் லேசான நீர்க்கசிவு ஏற்பட்டது.
இதுகுறித்து விவசாயிகள் மற்றும் அப்பகுதி மக்கள், உடனடியாக தாசில்தார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தகவல் தெரிவித்தனர். ஆனால், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் நேற்று ஏரியின் கான்கிரீட் தடுப்பு சுவர் அடிப்பகுதி உடைந்து தண்ணீர் வெளியேறியது. பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர், அங்குள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்ததால் 50 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர் நீரில் மூழ்கியது. தொடர்ந்து ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறிக்கொண்டு இருக்கிறது. 30 ஆண்டுகள் கழித்து நிரம்பிய ஏரியின் தண்ணீர் வெளியேறி வீணாவதை கண்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும்அதிகாரிகளை கண்டித்து ஊத்தங்கரை-கல்லாவி செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊத்தங்கரை டிஎஸ்பி சீனிவாசன், இன்ஸ்பெக்டர் முருகன், தாசில்தார் திருமால் மற்றும் பிடிஓ தவமணி ஆகியோர், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த மக்கள், மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி ரகுராமன் என்பவர் கூறுகையில், ‘கடந்த 3 ஆண்டுக்கு முன்பு, ஏரியின் கோடி பகுதியில் கான்கிரீட் தடுப்பு சுவர் கட்டப்பட்டது. புயல் மழைக்கு நிரம்பிய ஏரி கோடியின் அடிப்பகுதியில் உடைப்பு ஏற்பட்டு, நீர்க்கசிவு ஏற்படுவதாக அதிகாரிகளிடம் தெரிவித்தோம். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் அடிப்பகுதி உடைந்து, தண்ணீர் வெளியேறி விளைநிலங்களுக்குள் புகுந்ததில் 50 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளது. அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்திருந்தால் பயிர்ச்சேதம் ஏற்படாமல் தடுத்திருக்கலாம். தண்ணீரையும் பாதுகாத்து இருக்கலாம். எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும்’ என்றார். இதனிடையே, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேளாண்மை துறை அதிகாரிகள், சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டனர். இதுகுறித்து தாசில்தார் கூறுகையில், ‘வெள்ளத்தால் சேதமடைந்த பயிர் விவரம் குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும்,’ என்றார்.
The post ஊத்தங்கரை அருகே 30 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய ஏரி உடைந்தது: 50 ஏக்கர் நெற்பயிர் சேதம் appeared first on Dinakaran.