டெல் அவிவ்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப், எகிப்து அதிபர் அல் சிசி தலைமையில் எகிப்தில் இன்று நடைபெற உள்ள காசா அமைதி உச்சி மாநாட்டில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், பிரதமர் மோடி இந்த மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிறது. அதேநேரம், இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி நடைபெற்ற ஓர் இசை நிகழ்ச்சியில் ஹமாஸ் குழுவினர் திடீரென புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் உயிரிழந்தனர். 250 பேரை பிணைக் கைதிகளாக ஹமாஸ் குழுவினர் பிடித்துச் சென்றனர். இதைத் தொடர்ந்து, காசா மீது இஸ்ரேல் ராணுவம் கடும் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் 2 ஆண்டுகளாக நீடித்தது. இதில் பாலஸ்தீன தரப்பில் மொத்தம் 67 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.