சென்னை: “கடன் அளவைக் குறைப்பதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசின் அமைச்சர் கணக்குப்படியே 2021-22ல் கடன் அளவு 27.01%, 2022-23ல் கடன் அளவு 26.87%, 2023-24ல் கடன் அளவு 26.72%, 2024-25ல் கடன் அளவு 26.40% ஆக உயர்ந்துள்ளது. எனவே, திமுக-வின் ஸ்டாலின் மாடல் ஆட்சியில், இப்போது நிலுவைக் கடன் அளவு 26% தாண்டிவிட்டது. எந்த வகையில் இவர்கள் கடன் அளவைக் குறைத்துள்ளார்கள்? இதை நிதி அமைச்சர் தான் விளக்க வேண்டும்” என்று தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக மக்களுக்கு பொய் வாக்குறுதிகளை அளித்து, 2021-ல் ஆட்சிக்கு வந்த திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு, இன்று இந்தியாவிலேயே கடன் வாங்கும் மாநிலங்களில் முதலிடம் என்ற சிறப்பைப் பெற்று, அளவுக்கு அதிகமாக கடனை பெற்றுள்ளது என்பதை நான் சட்டமன்றத்திலும், பொது வெளியிலும் சுட்டிக்காட்டி, தமிழகத்தின் நிதி நிலைமை சீரழிந்து வருவதாக, நான் குறிப்பிட்டுப் பேசிய குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாக பதில் அளிக்காமல், எனக்கு பொருளாதார நிதி மேலாண்மை குறித்து அடிப்படை புரிதல் இல்லை என்று தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.