சேலம்: எடப்பாடி பழனிசாமி வழக்கை விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்த நிலையில், இவ்வழக்கில் ஓ.பன்னீர்செல்வத்தையும் விசாரிக்க சேலம் போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக அவருக்கு சம்மன் அனுப்பவும் முடிவு செய்துள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது தேனியை சேர்ந்த மிலானி என்பவர், சேலம் 1வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், சொத்துகள், வருமானங்கள் ஆகியவை குறித்த உண்மை தகவலை மறைத்து பொய்யான தகவலை தெரிவித்துள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இதனை விசாரித்த நீதிமன்றம், விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சேலம் மத்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டது. இதன்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த மே மாதம் அறிக்கை தாக்கல் செய்தனர். அதில், புகாருக்கான முகாந்திரம் இருப்பதால் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறோம் என தெரிவித்தனர். அதே நேரத்தில் தேனி மிலானி தாக்கல் செய்திருந்த மனுவில், எடப்பாடியின் வேட்புமனுவில் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வமும் கையெழுத்து போட்டுள்ளார்.
எனவே அவரை சாட்சியாக்க வேண்டும் என கூறியிருந்தார். இதற்கிடையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடப்பாடி பழனிசாமி பெற்ற தடை உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கி கடந்த 2 நாளுக்கு முன்பு உத்தரவிட்டு, விசாரணைக்கு எடப்பாடி ஒத்துழைக்கவும் கூறியது. இந்நிலையில் கடந்த 7 மாதங்களுக்கு பிறகு சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
ஏற்கனவே, ஈரோடு கல்லூரி, சேலம், இடைப்பாடி சார்பதிவாளர்கள், நாமக்கல், சென்னை பதிவாளர்கள், இடைப்பாடி கனரா வங்கியின் கிளை மேலாளர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி ஆவணங்களை திரட்டி வைத்திருந்தனர். தற்போது மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளனர். அதே நேரத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தலாமா? அல்லது நேரிடையாக சென்று விசாரணை நடத்தலாமா? என்பது குறித்தும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வரும் நிலையில், இதற்காக தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.
The post எடப்பாடி மீதான தேர்தல் வழக்கு ஓபிஎஸ்சை விசாரிக்க சேலம் போலீஸ் முடிவு: சம்மன் அனுப்ப அதிகாரிகள் ஆலோசனை appeared first on Dinakaran.