திருவொற்றியூர்: சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் தினசரி ஏராளமான மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், நோயாளிகள், தொழிலாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த வழித்தடத்தில் எண்ணூர் ரயில் நிலையம் அருகே நேற்று மதியம் 2.45 மணிக்கு திடீரென சிக்னல் பழுது ஏற்பட்டதால், அவ்வழியாக வந்த மின்சார ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. அடுத்தடுத்த ரயில் நிலையங்களிலும் ரயில்களும் ஆங்காங்கே நின்றன.
நீண்ட நேரமாகியும் சிக்னல் பழுது சரி செய்யப்படாததால், பயணிகள் சிலர் ரயில் பெட்டிகளில் இருந்து கீழே இறங்கி, அருகில் உள்ள பேருந்து நிறுத்தங்களுக்கு நடந்து சென்றனர். சுமார் 40 நிமிடத்திற்கு பிறகு, சிக்னல் பழுது சரி செய்யப்பட்டதால், மின்சார ரயில்கள் மீண்டும் இயங்க தொடங்கியது. எண்ணூர் ரயில் நிலைய மேலாளர் அறையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிக்னல் பழுது ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post எண்ணூரில் சிக்னல் கோளாறு: ரயில் சேவை பாதிப்பு appeared first on Dinakaran.