சென்னை: புதுச்சேரி பல்கலைக்கழக பதிவாளரை எந்த விளக்கமும் கேட்காமல் பதவியில் இருந்து விடுவித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி பல்கலைக்கழக பதிவாளர் பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்று, கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இப்பதவிக்கு தாகூர் அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் சசிகாந்த தாஸ் விண்ணப்பித்தார். தேர்வு நடைமுறைகள் முடிந்து, பதிவாளராக அவர் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், அவரை, ஒன்பது மாதங்களுக்கு பின்னர் பதிவாளர் பதவியில் இருந்து விடுவித்து பல்கலைக்கழகம் கடிதம் அனுப்பியது. இதையடுத்து, தன்னை பதவியில் இருந்து விடுவித்ததை எதிர்த்து அவர் தாக்கல் செய்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட சசிகாந்த தாஸ், மீண்டும் தாகூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் பணியில் சேர்ந்து விட்டார்.
பதிவாளர் தேர்வுக்காக புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்று பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பதவியில் இருந்து விடுவிக்கும் முன்பு சசிகாந்த தாஸ் தரப்பு விளக்கத்தை கேட்கவில்லை. எனவே, அவரை பதவியில் இருந்து விடுவித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அவர் மீண்டும் பதிவாளர் பதவியை ஏற்பதற்காக அரசு கல்லூரியில் இருந்து அவரை விடுவித்து 4 வாரங்களில் தகுந்த உத்தரவை புதுச்சேரி அரசு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
The post எந்த விளக்கமும் கேட்காமல் நடவடிக்கையா? புதுச்சேரி பல்கலை. பதிவாளரை விடுவித்த உத்தரவு ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.