சென்னை நகரில் ஒரு மணி நேரத்தில் 7 நகை பறிப்புச் சம்பவங்கள் அரங்கேறியிருப்பது மாநகர மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. காலையில் நடைபயிற்சி சென்றவர்களைக் குறிவைத்து நடந்துள்ள இச்சம்பவம் காவல்துறையின் பாதுகாப்பு நடவடிக்கைகளை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது.
சென்னை திருவான்மியூரில் இரண்டு சம்பவங்கள், கிண்டி, சைதாப்பேட்டை, பெசன்ட் நகர், பள்ளிக்கரணை, வேளச்சேரியில் தலா ஒரு சம்பவம் என 7 நகை பறிப்பு சம்பவங்கள் மூலம் 26 சவரன் நகை பறிக்கும் செயல் நடந்துள்ளது. இதுதவிர, ஊரப்பாக்கத்தில் வீட்டில் நுழைந்து 9 சவரன் நகையைப் பறித்த சம்பவமும் பதிவாகியுள்ளது. குற்றவாளியை பொதுமக்களே விரட்டிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். காலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டவர்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகள் விமானம் மூலம் ஐதராபாத் தப்ப முயன்றபோது காவல்துறை துரிதமாக செயல்
பட்டு அவர்களை மடக்கிப் பிடித்துள்ளது. அவர்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இதுமட்டுமல்ல ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் கொலை, சேலம் – திருப்பூர் நெடுஞ்சாலையில் பட்டப்பகலில் ரவுடி வெட்டிக் கொலை போன்ற சம்பவங்கள் தொடர்ந்து பகிரங்கமாக நடைபெறுவது கவலையளிப்பதாக உள்ளது.