விராட் கோலிக்கும் ரோஹித் சர்மாவுக்கும் வயதாகி விட்டது. மேலும் அவர்களது ஸ்பான்சர்களைத் திருப்தி செய்யவே அணியில் தக்க வைக்கின்றனர். இருவரும் வீரர்கள் என்பது போய் பிராண்ட் என்றாகி விட்டனர் என்றெல்லாம் கடுமையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில், 36-38 வயதாகும் இருவரையும் மீண்டும் உள்நாட்டுக் கிரிக்கெட்டில் ஆட வேண்டும் என்று வலியுறுத்தும் ரவி சாஸ்திரியின் அரசியல் பற்றிய கேள்வி நமக்கு எழுவது இயல்பே.
சஞ்சய் மஞ்சுரேக்கர் அளவுக்குக் கூட ஒரு மட்டுப்படுத்தப்பட்ட விமர்சனங்களைக் கூட பிசிசிஐ மீதோ, அவர்களின் ஸ்பான்சர்களின் அழுத்தம் குறித்தோ வாயே திறக்க மாட்டேன் என்று ரவி சாஸ்திரி இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. அதாவது, பிசிசிஐ, ஒலி/ஒளிபரப்பு உரிமைதார நிறுவனங்கள், ஸ்பான்சர்கள் என்று வருவாய் வலைப்பின்னலின் ஊழியராக, முகவர்களாக அனைவரும் மாறிய பின்பு உண்மையை உரக்க இவர்களால் பேச முடியும் என்று நம்பிக்கைக் கொள்வது அசட்டு நம்பிக்கையே.