சென்னை: “அமெரிக்காவில் இருக்கும் அதானி வழக்குக்கும் தமிழகத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. என்னை அதானி சந்திக்கவில்லை. நான் அவரை பார்க்கவும் இல்லை” என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று நேரமில்லா நேரத்தில் விவாதம் நடைபெற்றது. அப்போது, பாமக உறுப்பினர் ஜி.கே.மணி பேசும்போது, “அமெரிக்க நீதிமன்றத்தில் ஒரு வழக்கு உள்ளது. இந்திய சூரியஒளி மின்உற்பத்திக் கழகத்திடமிருந்து சூரியஒளி மின்சாரத்தை வாங்குவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டதில், அதில் முறைகேடு நடந்துள்ளதாக தமிழகத்தின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதால், அது உண்மையா, இல்லையா என்பதை அரசு விளக்க வேண்டும்” என்றார். அதற்கு பேரவை தலைவர் மு.அப்பாவு, “இதற்கு மின்சார துறை அமைச்சர் தெளிவான பதிலை கொடுத்துள்ளார்,” என்றார். அதற்கு ஜி.கே.மணி, “செய்தி வந்துவிட்டது. அது உண்மையா என்று தெரிய வேண்டும்,” என்றார்.