நியூயார்க்: அமெரிக்காவில் எப்பிஐ தலைமையகம், நீதித்துறையின் முக்கிய கட்டிடம் உட்பட 440 அரசு கட்டிடங்களை விற்பனை செய்யவும், மூடவும் அதிபர் டிரம்ப் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.அமெரிக்காவில் டிரம்ப் மீண்டும் அதிபரான பிறகு அரசு நிர்வாகத்தின் செலவை குறைக்க பல தடாலடி முடிவுகளை எடுக்கிறார். அந்த வரிசையில் தற்போது 440 அரசு கட்டிடங்களை விற்க அவர் முடிவெடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக விற்கப்படும் கட்டிடங்கள் பட்டியலை பொது சேவைகள் நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது. அதில், அமெரிக்காவின் அடையாளமாக கருதப்படும் பல அரசு கட்டிடங்கள் இடம் பெற்றுள்ளன.
குறிப்பாக, நாட்டின் முக்கிய புலனாய்வு அமைப்பான எப்பிஐயின் தலைமையகமான ஜே.எட்கர் ஹூவர் கட்டிடம் இடம் பெற்றுள்ளது. நீதித்துறை கட்டிடமான ராபர்ட் எப் கென்னடி கட்டிடம், பழைய தபால் அலுவலகம் ஆகியவை பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இங்கெல்லாம் அரசுப்பணிகள் பிரதானமாக நடைபெறவில்லை என்பது டிரம்ப் நிர்வாகம் கூறும் காரணம். அதனால், அவசியமில்லாத இந்த கட்டிடங்களை விற்கவும் மூடவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல கோடி அரசு பணம் மிச்சமாகும் என அதிகாரிகள் கூறி உள்ளனர். எப்பிஐ தலைமையகம் உள்ளிட்ட கட்டிடங்களின் கட்டிடக்கலையை டிரம்ப் எப்போதுமே விரும்பவில்லை. அவற்றை நவீன கால கட்டிடக் கலையில் அமைக்க வேண்டுமென விரும்புகிறார். அப்படி டிரம்ப் விரும்பாத பழைய கட்டிடங்களும் விற்பனை பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
இதுதவிர, அமெரிக்காவின் உள்நாட்டு வருவாய் சேவைத் துறையில் பணியாற்றும் 90,000 ஊழியர்களில் பாதி பேரை வீட்டுக்கு அனுப்பும் திட்டத்திற்கு ஆரம்ப கட்ட பணியை டிரம்ப் நிர்வாகம் ஆரம்பித்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகளால் அதிருப்தி அடைந்த மக்கள் பலர், டிரம்ப் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சமயத்தில் 50 மாகாணங்களிலும் பொது இடங்களில் போராட்டங்களை நடத்தி எதிர்ப்பை காட்டினர்.
The post எப்பிஐ, நீதித்துறை உட்பட 440 அரசு கட்டிடங்களை விற்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் முடிவு: பட்டியல் வெளியீடு appeared first on Dinakaran.