புதுடெல்லி: இந்தமாதம் திரைக்கு வரவிருக்கும்,‘எமர்ஜென்சி’ திரைப்படத்தைக் காண காங்கிரஸ் எம்.பி., பிரியங்கா காந்திக்கு அழைப்பு விடுத்ததாக நடிகையும் எம்பியுமான கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் கங்கனா முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வேடத்தில் நடித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பிரியங்கா காந்தியை சந்தித்து தான் உரையாடிய விவரத்தை பகிர்ந்துள்ள கங்கனா ரனாவத், திரைப்படத்தில் இந்திரா காந்தியை சித்தரிக்க தான் எடுத்துக்கொண்ட சிரத்தையையும் எடுத்துரைத்துள்ளார். இதுகுறித்து கங்கனா கூறுகையில், "உண்மையில் நாடாளுமன்றத்தில் நான் பிரியங்கா காந்தியை சந்தித்தேன். முதலில் நான் அவரிடம் சொன்னது, நீங்கள் ‘எமர்ஜென்சி’ படத்தை பார்க்க வேண்டும் என்று தெரிவித்தேன். அதற்கு அவர் மிகவும் கனிவுடன் ‘நிச்சயமாக , பார்க்கலாம்’ என்றார். மீண்டும் நான் நிச்சயம் அது உங்களுக்கு பிடிக்கும் என்று கூறினேன்" என்று தெரிவித்தார்.